திங்கள், அக்டோபர் 17, 2011

குழந்தைகளின் மீதான உரிமைகள்.


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

وِإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

...நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்'' எனவும் அவர் கூறினார். திருக்குர்ஆன். 3:36


குழந்தைகளின் மீதான உரிமைகள்.



பிறப்பது ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் அது அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடை என்று சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கான உரிமைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றிட முன் வர வேண்டும்.

பிரார்த்தனை

'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு பிறகு, 'நான் இக்குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் - என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள்.. ஸயீத் இப்னு முஸய்யப் (ரலி) அறிவித்தார்கள் நூல் புகாரி : 3431

...இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி) லிருந்து காப்பாற்ற உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.3:36

وِإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

மேற்காணும் துஆ மர்யம் (அலை) அவர்கள் பிறந்திருந்த பொழுது அவர்களின் தாய் இறைவனிடத்தில் செய்த பிரார்த்தனையாகும்.

புதிதாகப் பிறக்கும் தனது குழந்தைக்காக ஒவ்வொரு தாய், தந்தையரும் மேற்காணும் விதம் மர்யம் (அலை) அவர்களுடைய தாய் பிராரத்தித்ததுப் போன்று இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

பால் பிஸ்கட் மட்டும் போதாது.

குழந்தைகளைக் கொஞ்சுவதில் சிலர் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளைக் கொடுத்துவிட்டால் கடமை முடிந்தது என்று நினைத்துக் கொள்வார்கள்.

குழந்தைகளை கொஞ்சுபவரிடத்தில்தான் இறக்கமும், கருனையும் பிறக்கும் ஒரு மனிதரிடத்தில் கருனையின் முதல் ஊற்றுக் கண் பிறப்பது தனது குழந்தையிடம் காட்டப்படும் பரிவும், பாசத்திலிருந்தும் தான்.

மனிதன் தனது வாழ்நாளில் தனது அன்பையும், பாசத்தையும் முதன் முதலில் பொழியத் தொடங்குவது தனது குழந்தையின் மூலம் என்பதால் அதையும் தடைசெய்து கொண்டால்  அல்லாஹ் அவருடைய இதயத்திலிருந்து அன்பையும், பாசத்தையும் அகற்றிடவேச் செய்திடுவான்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் அகற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்கள். நூல்: புகாரி 5999.

நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை) இப்ராஹீமைத் தூக்கி (உச்சி) முகர்ந்து முத்தமிட்டார்கள். இதை அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் இப்னு அஸ்லம் (ரஹ்) அறிவித்தார்கள், அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் இப்னு அபீ நுஅம் (ரஹ்) அறிவித்தார்கள் நூல் புகாரி: 5994

அனைத்து ஜீவராசிகளுக்கும்

குழந்தைகளை முத்தமிட்டு அவர்களின் மீது அன்பு செலுத்துவது அவர்களுக்கு இடர் ஏற்படாமல் பாதுகாப்பது போன்றப் பண்புகளை மனிதர்களின் உள்ளத்தில் மட்டும் அல்லாஹ் ஏற்படுத்த வில்லை மாறாக அனைத்து உயிரினங்களுடைய உள்ளத்திலும் ஏற்படுத்தினான்.

எந்த நேரமும் காலால் தரையை மிதித்துக் கொண்டிருக்கக் கூடியக் குதிரை தனது குட்டி குதித்துக் கொண்டு காலுக்கடியில் வந்துவிட்டால் அது தனது காலில் மிதிபட்டு விடக் கூடாது என்பதற்காக அது அங்கிருந்து நகரும் வரை காலை உயர்த்திக் கொண்டே இருக்கும்.

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால் குளம்பைத் தூக்கிக் கொள்கிறது. '' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நூல் புகாரி : 6000.

அன்பு கொள்வாய் இறைவா !

குழந்தையை கொஞ்சுபவர்களில் பலர் குழந்தையைப் படைத்த இறைவன் இக்குழந்தைக்கான வாழ்வாதாரம் இவ்வளவுதான் என்று எழுதி இருப்பதை மறந்து விட்டு ஊராளும் ராசாவே, உலகாளும் ராசாவே என்றெல்லாம் ஏராளமான கற்பனைகளுடன் கொஞ்சி விட்டு அத்துடன் நிருத்தி விடுவதைப் பார்க்கிறோம் அவ்வாறல்லாமல் அவர்களை அன்புடன் அரவனைத்து முத்தமிட்டுக் கொஞ்சுவதுடன் இது போன்ற அன்பை இறைவன் அவர்கள் மீது பொழிய வேண்டும் என்றுக் கூறி பிரார்த்திக்க வேண்டும் நம்முடையக் குழந்தைகள் மீது நாம் செலுத்தும் அன்பை விட இறைவன் செலுத்தும் அன்பு பல மடங்கு அவர்களின் உலக மற்றும் மறுமை வாழ்வுக்காக பயனளிக்கும்.  

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறுவனாக இருந்த என்னைப்பிடித்துத் தம் ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹஸன் இப்னு அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தம் இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, 'இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்களின் மீது அன்பு செலுத்துவாயாக!'' என்றார்கள். (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புப் பேரரான உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல் புகாரி: 6003

படிப்பினைகள்.

  •   குழந்தைப் பிறந்ததும் மர்யம் (அலை) அவர்களின் தாயார் பிரார்த்தித்ததுப்போன்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறியவிதம் ஷத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோர வேண்டும்

  • *      குழந்தைகளை அன்புடன் முத்தமிட்டு விட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் அன்பு செலுத்துமாறு பிரார்த்தித்ததுப் போன்று பிராரத்திக்க வேண்டும்.




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்